
ஷா ஆலாம், மார்ச்-16-சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கிண்ண சதுரங்கப் போட்டி’ மார்ச் 14-ஙாம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
ஷா ஆலாம், சுங்கை ரெங்காம் தமிழ்ப் பள்ளியின் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியை சிலாங்கூர் ம.இ.கா தொடர்புக் குழுவும் மாநிலத் தலைமையாசிரியர்கள் மன்றமும் இணைந்து நடத்தின.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமைத் தாங்கி போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா உள்ளிட்டோரும் சிறப்பு வருகைப் புரிந்தனர்.
மொத்தம் 66 தமிழ்ப் பள்ளிகளில் இருந்து 548 மாணவர்கள் பங்கேற்று தங்கள் சதுரங்க திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவில் 370 மாணவர்களும், 9 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் 154 பேரும் பங்கேற்கின்றனர்.
மொத்தமாக 206 மாணவிகள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
12 வயதுக்குக் கீழ்பட்ட ஆண்கள் பிரிவில், குவாலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் லோகிதன் விஜயன் முதலாவதாக வந்தார்; சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின் யெஷ்விந்த் குணசேகரன் இரண்டாமிடத்தையும், துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியின் சித்தார்தன் சசீந்திரன் மூன்றாமிடத்தைப் பிடித்தனர்.
அதே வயதினருக்கான பெண்கள் பிரிவில், சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின் அஷ்ரீயா ராவ் சங்கரன் வாகை சூடிய வேளை, சிம்பாங் மோரிப் தமிழ்ப் பள்ளியின் புகழினி சேகரன் இரண்டாவதாகவும், சுங்கை ச்சோ தோட்டத் தமிழ்ப் பள்ளியின் காவியா ராதாகிருஷ்ணன் மூன்றாவதாகவும் வந்தனர்.
9 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களுக்கான பிரிவில் சுங்கை ச்சோ தோட்டத் தமிழ்ப் பள்ளியின் இளஞ்செழியன் ராதாகிருஷ்ணன் முதலிடத்தையும், கின்றாரா தோட்டத் தமிழ்ப் பள்ளியின் இளங்கோ குகன் இரண்டாமிடத்தையும், நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் அஜேஷ் சதிஷ்வரன் மூன்றாமிடத்தையும் வென்றனர்.
9 வயதுக்குக் கீழ்பட்ட சிறுமிகளுக்கான பிரிவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளியின் தேன்மொழி நேயமணி வாகை சூடினார்; சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின் ஸ்வாரீகா யுவராஜ் இரண்டாவதாகவும், வாகீசர் தமிழ்ப் பள்ளியின் ஏஷானிகா வடிவேல் மூன்றாவதாகவும் வந்தனர்.
சிறந்த பள்ளிக்கான விருது சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளிக்கு வழங்கப்பட்ட வேளை, இரண்டாமித்தை காசல்ஃபீல்ட் தமிழ்ப் பள்ளியும், மூன்றாமிடத்தை பூசாட் தெலோக் டத்தோ தமிழ்ப் பள்ளியும் கைப்பற்றின.
ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளோடு, சிறந்த ஆண், பெண் வீரர்களும் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் சிந்தனைக்கு வேலைக் கொடுக்கும் இந்த சதுரங்கப் போட்டி அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படுமென, சிலாங்கூர் ம.இ.கா தலைவர் டத்தோ ஷங்கர் ராஜ் ஐயங்கார் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
வரலாறு காணாத வகையில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்றது குறித்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், சிலாங்கூர் ம.இ.கா நிர்வாக உறுப்பினருமான சேகரன் D கூறினார்.
போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு இலவசப் பதிவு, காலை உணவு மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டி, மாணவர்களின் சிந்தனை, திட்டமிடும் திறன், ஒழுக்கம், பொறுமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு முக்கியமான மேடையாக அமைந்தது.



