
புத்ராஜெயா, அக்டோபர்-25 – சீனப் பள்ளி மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மதுபானங்களைப் பரிமாறும் தற்போதைய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் தொடர, அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது.
அதாவது, மாணவர்கள் தொடர்பில்லாத பொதுக் கூட்டங்கள் அல்லது திருமண நிகழ்வுகள் போன்றவற்றுக்காக பள்ளி மண்டபங்கள் வாடகைக்கு விடப்படும் போது, மது பரிமாறுதல் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு அதனைத் தெரிவித்தார்.
“தற்போதைய வழிகாட்டுதல்களில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் அவர்.
கல்வி அமைச்சு இதுகுறித்து விரைவிலேயே ஒரு விளக்க அறிக்கையை வெளியிடும் என்றும் ஃபாஹ்மி கூறினார்.
சில சீனப் பள்ளிகளின் மண்டபங்கள் தனியார் அல்லது பள்ளி மேலாளர் வாரியங்கள் மூலம் கட்டப்பட்டும் பராமரிக்கப்பட்டும் இருப்பதால், இத்தகைய நடைமுறைகள் நீண்ட காலமாகவே பின்பற்றப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
“பள்ளி வளாகங்களில் மதுபானங்கள் பரிமாறப்படக் கூடாது” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் கூறியிருந்த நிலையில், பல்வேறு கருத்துகளை பரிசீலித்து அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளது.
அன்வாரின் பேச்சை DAP ஆலோசகர் லிம் குவான் எங் உள்ளிட்ட சீன சமூகத் தலைவர்கள் விமர்சித்து, இது சீன சமூகத்தின் பாரம்பரிய வழக்கங்களில் அப்பட்டமான தலையீடாகும் என சாடியிருந்தனர்.
குவான் எங் ஒருபடி மேலே சென்று, இது “தேன்கூட்டைக் கலைப்பதற்கு சமமாகும்” என எச்சரித்தார்.
இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த முடிவு, கலாச்சார மரபுகளுக்கும் கல்விக் கொள்கைக்கும் இடையிலான சமநிலையை பேணும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.



