கோலாலம்பூர், ஜனவரி-22,வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜனவரி 24, வெள்ளிக் கிழமை தொடங்கி பெருநாளுக்கு முதல் நாளான ஜனவரி 28 வரை கோலாலம்பூரிலிருந்து நாட்டின் வட, கிழக்கு மற்றும் தென் பகுதிகளுக்கான போக்குவரத்து அதிகரிக்கக் கூடும்.
மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அவ்வாறு கணித்துள்ளது.
அந்த 2.6 மில்லியன் வாகனங்களில் 2.2 மில்லியன் வாகனங்கள் PLUS நெடுஞ்சாலையையும், 198,000 வாகனங்கள் KL-Karak நெடுஞ்சாலையையும், 82,000 வாகனங்கள் ஃபாசா சத்து கிழக்குக் கரை நெடுஞ்சாலையையும் பயன்படுத்தும்.
அதே சமயம் ஃபாசா டுவா கிழக்குக் கரை நெடுஞ்சாலையை 48,000 வாகனங்களும், WCE எனப்படும் மேற்குக் கடற்கரை விரைவுச் சாலையை 120,000 வாகனங்களும் பயன்படுத்துமென LLM கூறியது.
பெருநாள் முடிந்து மக்கள் மாநகர் திரும்புவது பிப்ரவரி 1, 2-டாம் தேதிகளில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாக் கால விடுமுறையின் போது, ஜனவரி 23 தொடங்கி பிப்ரவரி 2 வரை நெடுஞ்சாலைகளில், அவசரத் தேவைகள் தவிர்த்து எந்தப் பாதைகளையும் நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்கள் மூடாமலிருப்பதும் உறுதிச் செய்யப்படும்.
அதோடு, PLUS நெடுஞ்சாலையில் அதிக நெரிசல் ஏற்படும் 25 hotspot இடங்களில் smart பாதைகளையும் LLM முடுக்கி விடவுள்ளது.