
புத்ராஜெயா, ஏப்ரல்-7, 2025-ஆம் ஆண்டுக்கான சீனார் ச்சஹாயா மித்ரா உதவித் திட்டத்திற்கு, வரும் ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம்.
சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களால் பாதிக்கப்பட்ட இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த B40, M40 தரப்பினர், குறிப்பாக B40 குடும்பங்களின் நல்வாழ்வை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா மற்றும் YKN எனப்படும் தேசிய சமூக வாரியத்தின் ஒத்துழைப்போடு இவ்வுதவி வழங்கப்படுகிறது.
200 பேருக்கு பேரிடர் நிதி, 1,200 பேருக்கு தற்காலிக வீடுகள் அல்லது தங்குவதற்கு அறைகள், 1,526 பேருக்கு உணவுகள், உடைகள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், 1,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைக் கட்டண உதவி உள்ளிட்டவை இந்த உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
இது தவிர, 160 பேருக்கு மடக்கக் கூடிய கட்டில் வசதி, 1,200 பேருக்கு இறப்புக் காரியச் செலவு, 6,005 பேருக்கு உணவுக் கூடைகள், 2,026 பிரசவத் தாய்மார்களுக்கான உதவி, 4,000 பிள்ளைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கான பற்றுச் சீட்டுகள், 630 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்து மானியமும் வழங்கப்படுகின்றன.
உண்மையிலேயே இலக்கு வைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இவ்வுதவியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் விரைவிலேயே அறிவிக்கப்படும்.
அனைத்து விண்ணப்பங்களும் அதற்கேற்றவாறே பரிசீலிக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு infomitra@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.