
பெய்ஜிங், ஜனவரி 19 – கடந்த ஆண்டு சீனாவின் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதனால், சீன மக்கள் தொகை தொடர்ந்து நான்காவது ஆண்டாக குறைந்துள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகமான NBS தகவலின்படி, கடந்த ஆண்டு சீனாவில் 79.2 மில்லியன்குழந்தைகள் பிறந்தனர். இது ஆயிரம் பேருக்கு 5.63 பிறப்புகள் என்ற விகிதமாகும். 1949 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, இது மிகக் குறைந்த பிறப்பு விகிதமாகும்.
மக்கள் தொகை வேகமாக முதிர்ந்து வருவதால், திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதிக குழந்தை வளர்ப்பு செலவுகள் மற்றும் தொழில் கவலைகள் காரணமாக, இளம் தம்பதிகள் குழந்தைப் பெறுவதையே தள்ளிப் போடுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டில் 11.13 மில்லியன் மரணங்கள் பதிவாகியுள்ளன. மரண விகிதம் ஆயிரம் பேருக்கு 8.04 ஆக இருந்ததால், சீன மக்கள் தொகை தொடர்ந்து குறைவடைந்துள்ளதாக NBS தெரிவித்துள்ளது.



