
ஷங்ஹாய், ஏப்ரல்-23, ILRS எனப்படும் சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான அனைத்துலக நிலவு ஆராய்ச்சி நிலையத்திற்கான ஆரம்பத் திட்டங்களில், நிலவின் மேற்பரப்பில் ஓர் அணு உலையைக் கட்டுவதும் அடங்கும்.
சீன விண்வெளி அதிகாரி ஒருவர் அதனைத் தெரிவித்துள்ளார்.
தளத்தின் ஆற்றல் விநியோகம் நிலவின் மேற்பரப்பில் கட்டப்படும் பெரிய அளவிலான சூரியத் தொகுப்புகளைச் சார்ந்திருக்கலாம் என, சீனாவின் 2028 Chang’e-8 பயணத்தின் தலைமைப் பொறியியலாளர் Pei Zhaoyu கூறினார்.
சீனாவின் Chang’e-8 திட்டமானது, நிரந்தர மனிதர்கள் கொண்ட சந்திர தளத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசான சீனா, 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு பெரிய விண்வெளி சக்தியாக மாறுவதோடு, நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கவும் இலக்கு வைத்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஒரு புறக்காவல் நிலையத்தை உருவாக்குவதற்கான சீனாவின் காலக்கெடு, 2025 டிசம்பரில் அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்புக்கு அனுப்பும் நாசாவின் இலட்சியப் பயணமான Artemis திட்டத்துடன் ஒத்துப்போகிறது.
நிலவின் தென் துருவத்தை மையமாகக் கொண்ட இந்த ILRS திட்டத்தின் “அடிப்படை மாதிரி” 2035-க்குள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில், சீனா “555 திட்டத்தை” உருவாக்கி, 50 நாடுகள், 500 அனைத்துலக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5,000 வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை இந்த ILRS திட்டத்தில் சேர அழைக்கவிருக்கிறது