
செப்பாங், செப்டம்பர்-23,
KLIA 2 விமான முனையத்தில் ஸ்டார்பக்ஸ் ஊழியர் ஒருவர், ஆங்கிலத்தில் ஆர்டர் செய்யத் தடுமாறிய சீன சுற்றுப்பயணிக்கு தக்க உதவி செய்யாமல் “bodoh” என கடுப்பில் முனுமுனுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
அச்சுற்றுப்பயணி, ஒரு AI மென்பொருளின் உதவியுடன் ஆர்டரை முடிக்க முயன்றபோதும், பொறுமைக் காக்காத ஊழியர் அவரைத் தொந்தரவு செய்ததாகக் காணப்படுகிறது.
வீடியோவைப் பார்த்த உள்ளூர் வலைத்தளவாசிகள் அதிர்ச்சியடைந்ததோடு, இது தான் வெளிநாட்டினரை உபசரிக்குக் லட்சணமா என கொந்தளித்தனர்; சிலர் புகாரளித்ததாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டார்பக்ஸ் மலேசியா, சம்பந்தப்பட்ட ஊழியரின் செயல்பாடுகள் நிறுவனத்தின் மதிப்புகளைப் பிரதிபலிக்காது எனக் கூறி மன்னிப்புக் கோரியது.
உடனடியாக உள் விசாரணை நடத்தி, நேற்று முன்தினமே அந்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்து விட்டதையும் அது உறுதிப்படுத்தியது.
விருந்தோம்பலில் பணியாளர்களுக்கான பண்பாட்டுக் கூறுகள், மரியாதைமிக்க தொடர்பு முறை மற்றும் வாடிக்கையாளர் சேவை பயிற்சிகளை பலப்படுத்தும் தன் திட்டங்களையும் ஸ்டார்பக்ஸ் மலேசியா மறுஉறுதிப்படுத்தியது.
அதே சமயம், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கவும், ஸ்டார்பக்ஸ் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை நிலைநாட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அது உத்தரவாதமளித்தது.