சீறிப் பாயும் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள்; களைக்கட்டும் தமிழர்களின் வீர விளையாட்டு
மதுரை, ஜனவரி-16, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் களைக் கட்டியுள்ளது.
இதில் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் அவனியாபுர ஜல்லிக்கட்டு 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்களுடன் பொங்கலன்று கோலாகலமாகத் தொடங்கியது.
வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டன.
முதல் பரிசு பெறும் காளைக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் வாகனமும், முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக அறிவிக்கப்பட்டன.
இதனால் மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் காளைகளை பிடிக்க களத்திலிறங்கினர்.
1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஏறு தழுவல், மஞ்சுவிரட்டு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த ஜல்லிக்கட்டு, வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல.
மாறாக தமிழர்களின் பெருமைமிகு கலாச்சார அடையாளமாகும்.
விலங்கு நல அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்புத் தெரிவித்தாலும், போட்டி விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, ஒழுங்குமுறையோடு இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.