
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-22 – பினாங்கு சுங்கை பாக்காப்பில் கோர விபத்தில் படுகாயமடைந்த 2 சிறுவர்களை, செனட்டர் Dr லிங்கேஷ்வரன், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர் இருவரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பினாங்கு பெரிய மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பின் கீழ் அவ்விரு உடன்பிறப்புகளின் உடல்நிலை சீராக இருக்கின்றது.
இந்நிலையில் இருவரும் வசதியானச் சூழலில் குணமாக ஏதுவாக குளிரூட்டப்பட்ட தனி அறைகளை ஒதுக்க Dr லிங்கேஷ் ஏற்பாடு செய்துள்ளார்.
அதே சமயம், இந்த இக்கட்டானச் சூழலில் அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுப் பொம்மைகளையும் லிங்கேஷ் வாங்கித் தந்தார்.
இவ்வேளையில், இந்த சிரமானச் சூழலில் அக்குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அறப்பணி வாரியம் 4,000 ரிங்கிட் நிதியுதவியையும் ஒப்படைத்தது.
மேலும் ஏராளமானோர் அக்குடும்பத்துக்கு இது போன்ற உதவிகளை வழங்குவர் என எதிர்பார்ப்பதாக லிங்கேஷ் தெரிவித்தார்.
சிறார்களின் அறுவை சிகிச்சையை நல்ல முறையில் முடித்துக் கொடுத்த மருத்துவக் குழுவுக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்ட லிங்கேஷ், அவர்கள் சீக்கிரமே குணமடையவும் வேண்டிக் கொண்டார்.
பிப்ரவரி 18-ஆம் தேதி காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் பாட்டி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மண் லாரி மோதியதில், 7 வயது அண்ணன் இடது கையையும், பாலர் பள்ளி மாணவியான 5 வயது தங்கை வலது காலையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.