
சுங்கை பூலோ, நவம்பர் -3,
சுங்கை பூலோ கம்போங் டேசா அமான் பகுதியிலுள்ள நான்கு துணி கிடங்கு தொழிற்சாலைகள், இன்று காலை தீப்பிடித்து எரிந்ததில், ஆறு பேர் மூச்சுத்திணறல் காரணமாக காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணி வேலைகளை உடனடியாக தொடங்கினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இவ்விபத்தில், 2 தொழிற்சாலைகள் சுமார் 90 சதவீதம் வரை எரிந்து சேதமடைந்தன என்றும் மற்ற இரு தொழிற்சாலைகள் சுமார் 10 சதவீதம் சேதமடைந்தன என்றும் அறியப்பட்டது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் உடனடியாக சிகிச்சை வழங்கியதைத் தொடர்ந்து தீ அணைக்கும் பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும், விபத்தின் காரணம் விசாரணையில் உள்ளதென்றும் முக்லிஸ் தெரிவித்தார்.



