
புத்ராஜெயா, செப்டம்பர் -26,
மலேசியத் துப்புரவு தினத்தை ஒட்டி நாளை நாடளாவிய நிலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாபெரும் ‘கோத்தோங் ரோயோங்’ கூட்டுத் துப்புரவு நிகழ்வில் 100,000 பேர் பங்கேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பயன்படுத்தப்பட்ட 3,000 கிலோ கிராம் சமையல் எண்ணெயை மறுசுழற்சி நோக்கத்திற்காக சேகரிக்கவும், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT திட்டமிட்டுள்ளது.
உச்சக்கட்ட நிகழ்வாக, 2 புதிய மலேசிய சாதனைகளைப் படைத்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சி, போர்டிக்சன் Pantai Cahaya Negeri கடற்கரையில் நடைபெறுகிறது.
KPKT ஏற்பாட்டிலான இந்த முன்னெடுப்பில் பல்வேறு அரசு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்கின்றனர்.
ஐநா அனுசரிக்கும் உலக துப்புரவு நாளை (World Cleanup Day) முன்னிட்டும் இந்த ‘கோத்தோங் ரோயோங்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கோலாலாம்பூர் பசார் செனியில் முதன் முறையாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் 58,007 பேர் பங்கேற்றனர்.
அதோடு 4,645.50 டன் மெட்ரிக் திடக் கழிவுப் பொருட்களும் சேகரிக்கப்பட்டன.
தவிர, 12 மணி நேரத்திற்கு இடைவிடாமல் ‘கோத்தோங் ரோயோங்’ நிகழ்வும் நடைபெற்றது.
				
					
					


