
சுங்கை பூலோ, மார்ச்-19 – சிலாங்கூர், சுங்கை பூலோ பி.கே.ஆர் தொகுதித் தலைவராக டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தொகுதித் தேர்தலில் அப்பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள ஒரே வேட்பாளர் தாம் தான் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.
சுங்கை பூலோ பி.கே.ஆர் தொகுதிக்குத் தலைமையேற்க, தொகுதி உறுப்பினர்கள் தமக்கு வழங்கியுள்ள இவ்வாய்ப்புக்கு ரமணன் நன்றித் தெரிவித்துக் கொண்டதோடு அது தம் மீதான அவர்களின் நம்பிக்கையைப் புலப்படுத்துவதாகக் கூறினார்.
இப்புதியப் பொறுப்பின் மூலம், தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவேன் என்றும், மடானி அரசாங்கத்தின் அனுகூலங்கள் இன-மத பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதிச் செய்வேன் என்றும் ரமணன் உத்தரவாதமளித்தார்.
நோன்புப் பெருநாளை ஒட்டி, சுங்கை பூலோ அம்னோ கிளைத் தலைவர்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கிய நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இவ்வேளையில், மத்திய அளவில் முக்கியப் பொறுப்புகளுக்குப் போட்டியிடும் சாத்தியம் குறித்து அவரிடம் கேட்ட போது, அது குறித்து கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கலந்துபேசியிருப்பதாக ரமணன் சொன்னார்.
“நான் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்; MPP எனப்படும் மத்தியத் தலைமைத்துவ மன்றப் பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிய இன்னும் நாட்கள் உள்ளன; விரைவிலேயே என் முடிவை அறிவிப்பேன்” என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
நடப்பில், தேசிய அளவில் பி.கே.ஆர் கட்சியின் முதலாவது துணைத் தகவல் பிரிவுத் தலைவராக ரமணன் சேவையாற்றி வருகிறார்.