
ஈப்போ, நவம்பர் 18 – ஈப்போ கம்போங் சுங்கை பாப்பான் (Kampung Sungai Papan) பகுதியில், கடந்த மாதம் சுங்கை பேராக் ஆற்று நீர் திடீரென நீல நிறமாக மாறிய சம்பவத்தின் உண்மை காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இறுதி விசாரணை அறிக்கையும் தெளிவான முடிவை வழங்கவில்லை என பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் தெக் கோக் லிம் (Teh Kok Lim) தெரிவித்தார்.
மாசு எங்கிருந்து ஏற்பட்டதென்று இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் ஆற்றின் மேலேயுள்ள மாசுப்பொருள் நீரோட்டத்தில் ஓடி மறைந்ததால், அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், REE சுரங்கம் உட்பட சந்தேகிக்கப்படும் மூன்று சுரங்க நிறுவனங்களும் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
JAS, புதிய நீர்வழி உருவாக்கம் அல்லது இரசாயனத் தாக்கம் காரணமாக நீர் நீலமடைந்திருக்கலாம் என்று கூறினாலும், எந்த தொழிற்சாலையிலிருந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் efluen வெளியானதற்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.
கடத்த அக்டோபர் 21 ஆம் தேதியன்று நீலமடைந்த ஆற்றுநீரின் காணொளி வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அது பொதுமக்களின் கவனத்தை பெற்றது.



