
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – சுதந்திர மலேசியாவில் பூமிபுத்ரா சமூகத்திற்கு இத்தனை உயர்வாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 13-ஆவது மலேசியத் திட்டத்தில் தான் என பிரதமர் கூறியுள்ளார்.
அதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Putera35 என்றழைக்கப்படும் பூமிபுத்ரா பொருளாதார உருமாற்றத் திட்டமே இதற்கு தக்க சான்று என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பூமிபுத்ரா பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள அசைக்க முடியாத கடப்பாட்டை இது காட்டுவதாக அவர் சொன்னார்.
எனவே, நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே ஒற்றுமை அரசாங்கம் முக்கியத்துவம் தருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
மடானி அரசாங்கம் யாரையும் ஓரங்கட்டவில்லை என நேற்று மக்களவையில் பேசிய போது அன்வார் கூறினார்.
13-ஆவது மலேசியத் திட்டத்தில் சீனர்களின் Kampung Baru புது கிராமங்களின் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கிய அரசாங்கம், பெரும்பான்மை இனமான பூமிபுத்ராக்களுக்கு பிரத்தியேகமாக திட்டம் எதனையும் அறிவிக்கவில்லையே என, எதிர்கட்சியினர் முன்னதாக பிரச்னை எழுப்பியிருந்தனர்.
பூமிபுத்ராக்களுக்கு இது போன்று பொருளாதார அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் தான் மே 13 இனக்கலவரமே ஏற்பட்டதாக, பெண்டாங் MP பேசியதால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.