
தாவாவ், அக்டோபர்-25 – 800 முதல் 1,000 கிலோ கிராம் எடையும், 5.4 மீட்டர் நீளமும் கொண்ட இராட்சத முதலை, சபா தாவாவில் ஆற்றில் பிடிபட்டுள்ளது.
அதற்கு 60 வயது இருக்கலாம் என நம்பப்படுவதாக, சபா வனவிலங்குத் துறை கூறியது.
ஆற்றங்கரையில் மீன்பிடிக்கச் செல்லும் கிராம மக்களை ஒரு முதலை அடிக்கடி அச்சுறுத்தி வருவதாகக் கூறி, முன்னதாக ஃபேஸ்புக்கில் தகவல் வைரலானது.
ஆகக் கடைசியாக அக்டோபர் 19-ஆம் தேதி அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை அது தாக்க முயலும் வீடியோ ஒன்றும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்தே வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த இராட்சத முதலையோடு இன்னொரு சிறிய முதலையும் பொறியில் சிக்கியது; செவ்வாய்க்கிழமை மேலுமிரு முதலைகள் சிக்கின.
பிடிபட்ட முதலைகள் கருணைக் கொலை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டன.



