
கோலாலம்பூர், அக்டோபர்-25 – உணவக மற்றும் விருந்தோம்பல் தொழில்துறைகளில் நிலவும் மோசமான தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு உடனடி தீர்வு காணுமாறு, அரசாங்கத்தை மஇகா கேட்டுக் கொண்டுள்ளது.
PRESMA எனப்படும் மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்திடமிருந்து புகார் கிடைத்திருப்பதை அடுத்து, மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா அவ்வாறு வலியுறுத்தினார்.
உணவகத் தொழில்துறைக்கு உள்ளூரில் வேலையாட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.
சரி, வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கலாமென்றால், நிர்வாக கெடுபிடிகளும், விசா சிக்கல்களும் குறுக்கே நிற்கின்றன.
இது உணவகத் தொழிலை மட்டும் பாதிக்கவில்லை; ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மலேசியர்கள் நம்பியிருக்கும் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையே பாதிப்பதாக டத்தோ முருகையா சொன்னார்.
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தருவிப்பு மிக மிக அவசியமாவதாக PRESMA கருதுகிறது.
எனவே, அவர்களின் பிரச்னையை உணர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பையும், அவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையையும் அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும்.
உள்நாட்டவர்களை உணவகத் தொழிலுக்குக் கவர்ந்திழுக்க, சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட மாற்று வழிகளையும் அரசாங்கம் ஆராய வேண்டும்.
PRESMA உள்ளிட்ட துறை சார் தரப்புகள் எதிர்நோக்கும் சவால்களை அறிந்துகொள்ள, அவற்றுடன் அரசாங்கம் நேரடி சந்திப்புகளை நடத்த முன்வர வேண்டுமென்றும் டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.
உடனடி தீர்வு ஏற்படவில்லையென்றால், ஏராளமான இந்திய முஸ்லீம் உணவகங்களை மூட வேண்டி வரலாம்.
இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
PRESMA பிரதிநிதிகள் முன்னதாக டத்தோ முருகையாவை சந்தித்து தாங்கள் எதிர்நோக்கும் அம்முக்கியப் பிரச்னை குறித்து மகஜர் கொடுத்தனர்.