
பேங்கோக், நவம்பர்-15,தாய்லாந்தில் மதிய நேரங்களில் மது அருந்துவதற்கும் மது விற்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை அதிகாரிகள் இரத்துச் செய்துள்ளனர்.
புதிய விதிமுறை அமுலுக்கு வந்த சில நாட்களிலேயே சுற்றுப் பயணிகள் மற்றும் உள்ளூர் வணிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையால், குறிப்பாக சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்படும் என ஹோட்டல் மற்றும் மதுபான கடைகள் ஏற்கனவே எச்சரித்திருந்தும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ள தாய்லாந்து அரசு, டிசம்பர் தொடங்கி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனையை அனுமதிக்கும் 6-மாத கால பரீட்சார்த்த திட்டத்தை அறிவித்துள்ளது.
முன்னதாக, தடை நேரத்தில் மது வாங்கியோ குடித்தோ பிடிபட்டவர்களுக்கு 400 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இப்போது தடை மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால், சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு இது உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.



