
சண்டிகர், ஏப்ரல்-13, வட இந்திய மாநிலமான ஹரியானாவில் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் தனது காதலியை சூட்கேஸில் அடைத்து ஆண்கள் தங்கும் விடுதிக்குள் கொண்டுச் செல்ல முயன்றார்.
அப்போது பாதுகாவலர்கள் கையும் களவுமாக பிடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
இது போன்ற காட்சிகளை நாம் படங்களில் பார்த்திருப்போம்; ஆனால் OP ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் இது நிஜமாகவே நடந்திருக்கிறது.
சந்தேகத்தில் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அந்த சூட்கேஸை திறந்தபோது உள்ளேயிருந்து பெண் ஒருவர் வெளியே வந்தார்.
இதை பார்த்ததும் பலருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது.
அம்மாணவர், காதலியை சூட்கேஸில் அடைத்து ஆடவர் விடுதிக்கு கொண்டுச் செல்வதை, பாதுகாவலர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
என்ற போதும், சூட்கேஸை படிக்கட்டுகளில் இறக்கியபோது, அதனுள்ளேயிருந்து பெண் சத்தம் போட்டதாலேயே விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பெண் அதே பல்கலைக்கழக மாணவியா அல்லது வெளி ஆளா என்பது தெரியவில்லை; பல்கலைக்கழக நிர்வாகமும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
சம்பந்தப்பட்ட மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.
இச்சம்பவம் இந்திய வலைத்தளங்களில் வைரலாகி, ‘மீம்ஸ்’கள் பறந்தாலும், பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.