
தம்பின் , டிச 26 – சூரி நருடின் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
சூரி நருடினின் உடல் தம்பினுக்கு அருகேயுள்ள ஒரு வீட்டின் பின்னால் ஒரு பேக்கில் போடப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் முகமட் ரெட்ஷா அஷார் ரெசாலி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 51 வயதான ஸைனிசான் ஜைனால் அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார்.
இருப்பினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
டிசம்பர் 7ஆம் தேதிக்கும்18ஆம் தேதிக்குமிடையே ரெம்பாவ் ஜாலான் பெடாஸ் லிங்கியிலுள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் 53 வயதுடைய சூரி நருடினை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 30 ஆண்டுக்கும் குறையாமல் கூடிய பட்சம் 40 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் 12 க்கும் குறையாத பிரம்படியும் விதிக்கப்படலாம்.
சவ பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைக்காக இந்த குற்றச்சாட்டு எதிர்வரும் ஜனவரி 27 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் சிலாங்கூர் அம்பாங்கில் சூரி நருடின் காணாமல்போனதாக கூறப்பட்டது.



