
ஷா ஆலாம், பிப்ரவரி-9-சிலாங்கூர் செத்தியா ஆலாமில் வழக்கமாக அமைதியாகக் காணப்படும் ஜாலான் செத்தியா இண்டா குடியிருப்புப் பகுதி, 2 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் நேற்று பெரும் பரபரப்பானது.
அங்குள்ள 2 மாடி வாடகை வீட்டொன்றில் 30 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடி இறந்துகிடந்ததை, கடைசியில் அப்பெண்ணின் தந்தையே கண்டெடுத்தார்.
2 வாரங்களாக மகளை கைப்பேசியில் தொடர்புகொள்ள பலதடவை முயற்சித்தும் பலனில்லாமல் போகவே, வீட்டு வேலி வரை அவர் வந்துபோயுள்ளார்.
ஆனால், அப்போதும் பதில் இல்லை; மகளின் காதலனும் கைப்பேசியை எடுக்கவில்லை; வீட்டுக்கு வெளியே அவர்களின் காலணிகள் கலையாமல் அப்படியே இருந்தன.
“ஒருவேளை இருவரும் எங்கேயோ ஓடிப்போய் விட்டார்களோ” என்று நினைத்திருந்த தந்தைக்கு, அந்த நேரமாக மகள் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் கைப்பேசியில் அழைத்துள்ளார்.
சில மாதங்களாக வாடகைக் கட்டவில்லை; அழைத்தாலும் பதில் இல்லை என அவர் புகார் கூறவே, இருவரும் பாதுகாவலர் உதவியுடன் வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தனர்.
அப்போதே ஒருவித துர்நாற்றம் வீசிய நிலையில், கீழ்மாடியில் உள்ள அறையின் படுக்கையில் மகளின் உயிரற்ற உடலைக் கண்டு தந்தை அதிர்ந்துப்போனார்; காதலன் தரையில் இறந்துகிடந்தார்.
அதன் பிறகே போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலங்கள் மீட்கப்பட்டன.
இருவரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை; இதையடுத்து தற்போதைக்கு திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கூறிற்று.
சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்தக் காதல் ஜோடி அடிக்கடி வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் சண்டைப் போட்டு கொள்வது வாடிக்கை என அண்டை வீட்டாரில் சிலர் கூறியுள்ளனர்.



