
பத்து மலை, ஜனவரி-1 – 140 அடி உயர முருகன் சிலை நிறுவப்பட்ட 20-ஆம் ஆண்டு விழா இன்று காலை பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பத்து மலையின் கம்பீர அடையாளமான அம்முருகன் சிலை, புனரமைப்புக்குப் பிறகு இன்று புத்தாண்டு தினத்தில் மீண்டும் பக்தகோடிகளுக்கு பிரமாண்டமாக காட்சியளித்தது.
புதுப்பொலிவுடன் சிலை காட்சித் தருவதைக் காண மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர்.
காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை, தொடர்ந்து 8 மணிக்கு பத்துமலை சஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.
9 மணிக்கு சிறப்பம்சமாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ நடராஜா தலைமையில்,
முருகன் சிலையின் அடியில் பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாதை வழியாக ஏறிச் சென்று பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்தனர்.
இது விழாவுக்கு மேலும் மெருகூட்டியதாக தான் ஸ்ரீ நடராஜா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இவ்வேளையில், இன்றைய நிகழ்வில் முத்தாய்ப்பாக 140 அடி முருகன் சிலைக்கு ட்ரோன் வாயிலாக பன்னீர் அபிஷேகமும், 9 அடி உயரத்தில் ஆராதனையும் காட்டப்பட்டது.
பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த அந்நிகழ்வு குறித்து, தேவஸ்தான அறங்காவலரும், மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவருமான டத்தோ என் சிவகுமார் பேசினார்.
சிறப்பு வருகை புரிந்த ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், வெளிநாட்டவர் மத்தியில் மலேசியாவின் முக்கிய அடையாளமாக திகழும் பத்து மலைக்கு இந்த முருகன் சிலை மென்மேலும் சிறப்பை சேர்ப்பதாகத் தெரிவித்தார்.
பிறந்துள்ள புத்தாண்டு அனைவருக்கும் நன்மையைக் கொண்டு வரட்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.
திருமுருகப் பெருமானின் தரிசனம் மூலம் புத்தாண்டின் முதல் நாள் மிகச் சிறப்பானதொன்றாக அமைத்திருப்பதாக, பெரும் ஆர்வத்துடன் வந்திருந்த பத்தர்கள் சிலரும் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தனர்.
இந்த ஒரு நாள் நிகழ்வில், மாலை 4.30 மணிக்கு, பிரபல பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.



