
கோலாலம்பூர், ஜனவரி-19-இணைய செய்தி ஊடகமான FMT-யின் முன்னாள் செய்தியாளர் ரெக்ஸ் தான் (Rex Tan) கைது விவகாரத்தில், பொது மக்கள் அவரின் குடும்பத்தினருக்கு எந்தவொரு மிரட்டல்களும் விடக் கூடாது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
குடும்பத்தாருக்கு எதிரான இச்செயல் நியாயமற்றது மற்றும் எல்லை மீறியதாகும்.
சட்ட நடைமுறைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதால், சமூக ஊடகங்களில் இதுபோன்ற தொல்லைகள் நிலையை மேலும் மோசமாக்கும் என அவர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், பத்திரிகையாளர்களுக்கு எதிரான புகார்கள் MMM எனப்படும் மலேசிய ஊடக மன்றத்தின் வழியே தீர்க்கப்பட வேண்டும் என, அதன் துணைத் தலைவர் பிரமேஷ் சந்திரன் கூறியுள்ளார்.
ஊடக சுதந்திரத்தையும், பொறுப்பையும் ஒருங்கிணைக்கும் முறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
எனவே சுய-ஒழுங்குமுறைக்கு MMM-க்கு வாய்ப்பு வழங்கப்படுதோடு, கைது நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
ரெக்ஸ் தானின் கைது, MMM மூலம் ஊடக சுய-கட்டுப்பாட்டுக்கு அதிக அங்கீகாரம் அளிக்க அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளதாகவும் பிரமேஷ் கூறினார்.
31 வயதான ரெக்ஸ் தான், பாலஸ்தீன விவகாரத்தைப் பற்றிய ஒரு கருத்தரங்கில் மலேசியாவில் இனவாதம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரிட்டன் அரசியல்வாதி ஒருவரிடம் சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியதற்குப் பிறகு கைதுச் செய்யப்பட்டார்.
பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவரது கைப்பேசி விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



