
செபராங் பிறை, மார்ச்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள லோரோங் சிக்கு 2 சாலைக்கு, Dr எம்.பி.எல். ஏகப்பனின் (Dr. M.P.L. Yegappan) பெயரை சூட்டுமாறு, MBSP எனப்படும் செபராங் பிறை மாநகர மன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநகர மன்ற உறுப்பினரான யோகன்ராஜ் தேவர் அப்பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
Dr ஏகப்பன் பினாங்கின் முக்கிய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் புக்கிட் மெர்தாஜம் நகராண்மைக் கழகத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பன்முக பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
புக்கிட் மெர்தாஜாமில் தனியார் மருத்துவச் சேவையின் முன்னோடிகளில் ஒருவராகவும், மக்களுடன் நெருக்கமாக இருந்த சமூகத் தலைவராகவும் அறியப்பட்டவர்.
பின்னர் மாநில அரசின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
பினாங்கில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிந்தனையை 1962-டிலேயே முன்வைத்தவரும் இவரே..
அம்முயற்சியே பின்னர் USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம் உருவாக வழிவகுத்தது.
அவரது சேவைகள் நீண்ட காலம் மறக்கப்பட்டிருந்த நிலையில், 2024-ல் வெளியான “Heart of Service – The Untold Story of Dr MPL Yegappan” என்ற நூல் அவரது பங்களிப்பை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், சாலையின் பெயரை ஏகப்பன் என மாற்றம் செய்தால், வரலாறு, பாரம்பரியம் மற்றும் நகரத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் முக்கியமான நடவடிக்கையாக அமையும்.
எனவே, MBSP இப்பரிந்துரையை நன்கு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டுமென யோகன்ராஜ் கேட்டுக் கொண்டார்.



