
நிபோங் திபால், ஆகஸ்ட்-17- Ladang Sungai Kechik தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருந்த 23 குடும்பங்களுக்கு, Rumah Mutiaraku திட்டத்தின் கீழ் இலவச மாற்று வீடுகளை பினாங்கு அரசாங்கம் வழங்குகிறது.
ஒவ்வொரு குடும்பமும் 750 சதுர அடியில் 3 படுக்கையறைகள் 2 கழிவறைகளுடன் கூடிய C1 இரக வீடுகளைப் பெறும் என, மாநில முதல்வர் Chow Kon Yeow அறிவித்தார்.
மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில், 3 கோயில்களின் மறு நிர்மாணிப்பையும் இந்த வீடமைப்புத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.
மேம்பாட்டு நிறுவனத்தின் வரைப்படத்திற்கு அனுமதி கிடைத்ததும், அடுத்தாண்டு தொடக்கத்திலேயே கட்டுமானத்தைத் தொடங்கலாம் என்றார் அவர்.
மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கிடைப்பதை உறுதிச் செய்யும் பொருட்டு, நில உரிமையாளருடன் பேசி இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக மொத்தமாக 85 வீடுகள் கட்டப்படும்.
எனினும், சம்பந்தப்பட்ட 23 குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டி முடிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும். எஞ்சிய 62 வீடுகள் பின்னர் விற்பனைக்குத் திறக்கப்படும்.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகே அக்குடும்பங்கள் வெளியேறிச் செல்லலாம் என, LPNPP எனப்படும் பினாங்கு மாநில வீடமைப்பு வாரியம் மற்றும் Sierra Residences (M) Sdn Bhd நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் கூறினார்.
வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ் சுந்தரராஜுவும் அதில் கலந்துகொண்டார்.
10 ஆண்டு கால நிலப்பிரச்னைக்கு ஒருவழியாக தீர்வு கிடைத்திருப்பது குறித்து தோட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இவ்வேளையில் Ladang Sungai Kechil தோட்டத்தில் உள்ள 23 குடும்பங்களுக்கு இலவச வீடு வழங்குவதற்கான உறுதிமொழியை நிறைவேற்றியதற்காக, உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி மாநில அரசைப் பாராட்டியுள்ளார்.
அதே சமயம் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிற தோட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கும் குறைந்த விலையில் வீடுகளை வழங்க பினாங்கு அரசை அவர் வலியுறுத்தினார்.
பினாங்கு முழுவதும் உள்ள தோட்டங்களில் தலைமுறைத் தலைமுறையாக உழைத்து வரும் பிற இந்திய குடும்பங்களுக்கும் அரசு கருணை காட்ட வேண்டும் என்றார் அவர்.
முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் துயர நிலையை முதல்வர் Chow Kon Yeow நன்கு அறிந்திருப்பதாக அவர் கூறினார்.