
சிட்னி, டிசம்பர் 17-ஆஸ்திரேலியா, சிட்னி Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த சந்தேக நபரான 24 வயது நவீத் அக்ரம் மீது கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு குழு மொத்தம் 59 குற்றங்களைச் சுமத்தியுள்ளது.
அவை முறையே, பயங்கரவாதச் செயலைச் செய்ததாக 1 குற்றச்சாட்டு, கொலைச் செய்யும் நோக்கத்துடன் உடல் ரீதியாக கடும் தீங்கு விளைவித்ததாக 40 குற்றச்சாட்டுகள், 15 கொலைக் குற்றச்சாட்டுகள், உடல் ரீதியாக கடும் காயங்களை ஏற்படுத்தும் நோக்கில் சுடும் ஆயுதத்தால் சுட்டதாக 1 குற்றச்சாட்டு, தீங்கு விளைவிக்கும் நோக்கில் கட்டடமருகே வெடிப்பொருளை வைத்ததாக 1 குற்றச்சாட்டு, தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத சின்னத்தை காட்சிக்கு வைத்ததாக 1 குற்றச்சாட்டாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹனுக்கா கொண்டாட்டத்தில் நவீத் மற்றும் அவனது 50 வயது தந்தை சஜித் அக்ரம் ஆகியோர், யூத சமூகத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 41 பேர் காயமடைந்தனர்.
போலீஸ் நடத்திய பதில் தாக்குதலில் தந்தை கொல்லப்பட, படுகாயமடைந்த அக்ரம், மருத்துவமனையில் முழு போலீஸ் பாதுகாப்பில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறான்.
உடல்நிலை சீரானதும், வீடியோ மூலம் அக்ரம் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



