ஜகார்த்தா முருகன் ஆலய மகா கும்பாபிஷேம் விமரிசியாக நடந்தேறியது; இந்தோனேசியாவின் வேற்றுமையில் ஒற்றுமை அம்சத்திற்கு மோடி புகழாரம்

புது டெல்லி, பிப்ரவரி-4 – இந்த தைப்பூச மாதத்தில் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் முருகன் குடிகொண்டுள்ளார்.
ஆம், இந்தோனீசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம் எழுந்தருளி ஜகார்த்தாவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 4,000 சதுர மீட்டர் நிலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அதன் மகா கும்பாபிஷேகமும் அண்மையில் கோலாகலமாக நடந்தேறியது.
அதில் சிறப்பம்சமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வாயிலாகப் பங்கேற்றார்.
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” எனத் தமிழில் கூறி உரையைத் தொடங்கிய மோடி, கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டது தனது பாக்கியமென்றார்.
இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான பிணைப்பானது, பாரம்பரியம், அறிவியல் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது;
இரண்டுமே வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரம்பரியமிக்க நாடுகள் என்றார் அவர்.
வெகு தொலைவிலிருந்தாலும், இந்தியாவும், இந்தோனீசியாவும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதைப் போலவே தாம் உணருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இவ்வேளையில், முருகன் கோயில் திறப்பு விழாவில் இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவின் இளைய சகோதரர் Hashim Djojo Hadi Kusumo சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இன்னும் பிற அரசாங்க உயரதிகாரிகளும், மதத் தலைவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
முருகன் மட்டுமின்றி பிற தெய்வங்களின் சன்னதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஜகார்த்தா முருகன் கோயில், இந்தியா-இந்தோனீசியா இரு கலாச்சாரங்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பைக் காட்டும் ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.