
புத்ராஜெயா, ஜூலை-24- தலைநகரில் வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணி அமைதியாகவும் ஒழுங்குமுறையோடும் நடைபெறட்டும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
பங்கேற்பாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு, போலீஸ் படையையும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா ( Tunku Nashrul Abaidah) அதனைத் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்களுக்கு எவ்வித நெருக்கடியும், தடையும் விதிக்கப்படாமலிருப்பதையும் போலீஸார் உறுதிச் செய்ய வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக, துங்கு நஷ்ருல் கூறினார்.
ஜனநாயகத்தின் மாண்பைப் போற்றும் மடானி அரசின் நிலைபாட்டில் எந்தவொரு மாற்றமுமில்லை; சுதந்திரத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நாட்டில் அரசாங்க எதிர்ப்பாளர்களின் பேச்சுரிமையும் மதிக்கப்படும்; பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தில் அதற்கான வாய்ப்புகள் விசாலமாக வழங்கப்படுவதோடு, மதிக்கவும் படுவதாக துங்கு நஷ்ருல் சொன்னார்.
அன்வாரை பதவி விலக வலியுறுத்தி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அந்த ‘Turun Anwar’ பேரணி தொடர்பில் இதுவரை 60 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, கோலாலாம்பூர் போலீஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
எதிர்கட்சியினர், அரசு சாரா அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் என சுமார் 10,000 முதல் 15,000 பேர் வரை இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்கக்கூடுமென போலீஸ் கணித்துள்ளது.