ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-21 – 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு வரும் ஜனவரி 4 & 5-ஆம் தேதிகளில் பினாங்கில் நடைபெறவுள்ளது.
ஜியோர்ஜ்டவுன், ஸ்ரீ பினாங்கு மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அந்த இரு நாள் மாநாடு நடைபெறுவதாக, ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜே. செல்வகுமார் தெரிவித்தார்.
தமிழ் கலை, கலாச்சார நிகழ்வுகளோடு, பன்னாட்டு சிறு – குறுந்தொழில் அதிபர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பெண்களுக்கான தலைமைத்துவப் பட்டறை, உலக இணைப்பு மாநாடு என பன்முக விழாவாக அது நடைபெறுவதாக அவர் சொன்னார்.
மாநாட்டின் சிறப்பம்சமாக, சாதனைப் புரிந்த தமிழர்களுக்கு சாதனைத் தமிழன் விருது, ஆசிரியர்களுக்கு நல்லாசான் விருது, இளம் சிறார்களை ஊக்குவிக்க இளம் சிறார் விருது உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், மேயர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டு சின்னம் மலாய், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிகளில் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் MSME, மலேசியாவின் SME Corp, மலேசிய இந்திய வர்த்தகச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில், பினாங்கு மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் இம்மாநாடு நடைபெறுகிறது.
எனவே, பொது மக்கள் அனைவரும் திரளாக வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொண்டது.