
தோக்யோ, டிசம்பர்-9 – வடகிழக்கு ஜப்பானியக் கடற்கரைக்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், Amori மற்றும் Hokkaido பகுதிகளை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நிலநடுக்கத்துக்குப் பிறகு, ஜப்பானிய வானிலை ஆராய்ச்சித் துறை அதிகபட்சம் 3 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.
இதனால் கடலோரப் பகுதிகளில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கருதி உயர்ந்த இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஆரம்ப சுனாமி அலைகள் கரையைத் தாக்கினாலும், அவை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்தன.
அதாவது 20 முதல் 70 சென்டி மீட்டர் உயரம் கொண்ட அலைகள் மட்டுமே துறைமுகங்களில் பதிவாகின.
என்றாலும் நில நடுக்கத்தில், வீடுகள் மற்றும் கட்டடங்கள் கடுமையாக குலுங்கியதால் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர்.
உயிர் சேதம் எதுவுமில்லை.
இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டாலும், அங்குள்ள அணு ஆலைகளில் பெரிய சேதம் ஏதும் பதிவாகவில்லை.
இருந்தபோதிலும் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிலநடுக்கத்திற்கு பிந்தைய வலுவான அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், கடலோர மக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



