
உலு திரங்கானு, மே-2, LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் 4 சக்கர வாகனம் மோதி ஓர் ஆண் கருஞ்சிறுத்தை இறந்துபோனது.
387-ஆவது கிலோ மீட்டரில் நேற்று அதிகாலை 1 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
காட்டுப் பகுதியை நோக்கி நெடுஞ்சாலையை குறுக்கே கடக்கும் போது கருஞ்சிறுத்தை மோதப்பட்டுள்ளது என, உலு திரங்கானு போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் ஷாருடி அப்துல் வஹாப் தெரிவித்தார்.
கருஞ்சிறுத்தை திடீரென குறுக்கிட்டதால், கிளந்தானிலிருந்து கெமாமான் சென்று கொண்டிருந்த காரோட்டியான 19 வயது இளைஞரால், அதனை மோதுவதைத் தவிர்க்க இயலவில்லை.
எனினும் அவருக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை.
கருஞ்சிறுத்தையின் சடலம் மேல் நடவடிக்கைக்காக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டது



