கோலாலம்பூர், மே-7,
தலைநகரில் இன்று பிற்பகல் தொடங்கி பெய்த கனமழையின் போது ராட்சத மரமொன்று சாலையில் வேரோடு சாய்ந்ததில் ஓர் ஆடவர் மரணமடைந்தார்.
Jalan Sultan Ismail-லில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் மொத்தமாக 17 வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
விழுந்த மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட வாகனங்களில் இருந்து இருவர் வெளியே மீட்கப்பட்ட போதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததை தீயணைப்பு மீட்புத் துறை உறுதிபடுத்தியது.
மரணமடைந்தவர் 47 வயது மலாய் ஆடவர்; காயங்களுடன் உயிர் தப்பியவர் 26 வயது இளைஞர் என அத்துறை அறிக்கையொன்றில் கூறியது.
அந்த ராட்சத மரம் வேரோடு சாலையில் சாய்ந்த போது, அதன் கிளைகள் அருகிலுள்ள மோனோரேல் தண்டவாளத்தில் முறிந்து விழுந்தன.
இதனால் மோனோரேல் சேவையும் பாதிக்கப்பட்டது; குறிப்பாக KL Sentral – Medan Tuanku இடையிலான சேவை தடைபட்டதை Rapid KL நிறுவனம் உறுதிபடுத்தியது.
அச்சம்பவத்தில், அருகில் உள்ள பேருந்து நிலையமும் சேதமுற்றது.
மரம் சாய்ந்ததில் சாலையில் இருந்த கார்கள் நொறுங்கி கடும் சேதமடைந்தக் காட்சிகள் அடங்கியப் புகைப்படங்களும் காணொலிகளும் வைரலாகியுள்ளன.