
புத்ராஜெயா, ஜனவரி-8 – குடியுரிமை விதிகளில் செய்யப்பட்டுள்ள வரலாற்றுப்பூர்வ மாற்றம் வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
அவ்வகையில் குடியுரிமை இல்லாத கணவன்கள் மூலம் மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி இயல்பாகவே மலேசிய குடியுரிமைக் கிடைக்கும்.
குடியுரிமைத் தொடர்பில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு ஏற்ப இது அமைவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதுவரை தந்தையரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது எளிதாக இருந்தாலும், தாய்மார்களுக்கு நீண்ட கால சட்டப் போராட்டம் அவசியமாக இருந்தது.
எனினும், இப்புதிய சட்டம், தந்தை–தாய் இருவருக்கும் சம உரிமையை வழங்குகிறது; இது பாலின சமத்துவத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த நடைமுறை, வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிம்மதியை அளிக்கிறது.
மனித உரிமை அமைப்புகள் இதை நீதி மற்றும் சமத்துவத்தின் வெற்றியாக வரவேற்றுள்ளன.



