ஜெராண்டூட், டிசம்பர்-22, பஹாங், ஜெராண்டூட்டில் டிரேய்லர் லாரியிலிருந்து கழன்றோடி வந்த டயர் மோதியதில், காரிலிருந்த குடும்பம் விபத்தில் சிக்குவதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியது.
நேற்று மாலை 6.30 மணியளவில் சுங்கை சாலான் பாலமருகே, ஜாலான் ஜெராண்டூட் – மாரான் சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மனைவி, 2 வயது மகள் மற்றும் மனைவியின் தோழியுடன் பண்டார் ஜெங்காவிலிருந்து ஜெராண்டூட் செல்லும் வழியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, 28 வயது காரோட்டுநர் Mohamad Afiq Syahmi Mohd Ramlan தெரிவித்தார்.
“திடீரென டயர் ‘பறந்தும்’ உருண்டோடி வருவதையும் கண்டு காரை இடதுப் பக்கமாகத் திருப்ப முயன்றேன், ஆனால் அதற்குள் அது காரின் முன்பகுதியையும், முன்புற வலப்பக்க மற்றும் பின்னால் கதவுகளையும் மோதி விட்டது ” என்றார் அவர்.
அந்த Honda City காரை உடனடியாக ஓரமாக நிறுத்தி விட்டு, அவர்கள் பாதுகாப்பான இடத்தில் நின்றுக் கொண்டனர்.
டயர் கழன்றோடியது தெரியாமல் டிரேய்லர் நிற்காமல் சென்று விட்டது; எனினும் சில வாகனமோட்டிகள் விரட்டிச் சென்று அதன் ஓட்டுநரைப் பிடித்து நிறுத்தினர்.
Mohamad Afiq பின்னர் அது குறித்து ஜெராண்டூட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தலைக்கு வந்த ஆபத்து டயரோடு போனதே என்றெண்ணி Harian Metro-விடம் அவர் பெருமூச்சு விட்டார்.