ஜொகூர்–சிங்கப்பூர் வீடமைப்பு மானியத் மோசடியில் RM3 மில்லியன் இழப்பு

சிங்கப்பூர், நவம்பர்-15, ஜோகூர்–சிங்கப்பூர் கூட்டு வீடமைப்பு மானியம் என்ற பெயரில் பரவியுள்ள மோசடி திட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மக்கள் RM3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை இழந்துள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“JBSG Housing Subsidy Programme”, “Free Homes Across the Causeway” போன்ற பெயர்களில் இணையத்தில் உலா வரும் அந்த விளம்பரங்கள், ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் அரசுகள் இணைந்து வழங்கும் திட்டங்கள் என்று கூறி பொது மக்களை நம்ப வைத்துள்ளன.
இதை நம்பியவர்கள் messaging app செயலிகளில் அழைக்கப்பட்டு, அவர்களின் அடையாள அட்டை எண்கள், முகவரி, மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்களும், “சட்டச் செலவு”, “ஸ்டாம்ப் கட்டணம்” என கூறி பண பரிவர்த்தனைகளையும் கேட்டு மோசடி செய்யப்பட்டுள்ளனர்.
சில ஆவணங்களில் உயர்மட்ட அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற வீடமைப்பு மானியத் திட்டம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்திய சிங்கப்பூர் போலீஸ், சரிபார்க்கப்படாத மூலங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும், பணம் அனுப்ப வேண்டாம் என்றும் பொது மக்களை எச்சரித்துள்ளது.
எல்லைகடந்த மோசடிகள் நாளுக்கு நாள் நுணுக்கமாகி வருவதை இச்சம்பவம் காட்டுகிறது; எனவே பொது மக்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



