Latestமலேசியா

ஜோகூரில் ஓட்டப் போட்டியில் அரைகுறை மற்றும் தகாத ஆடை; இரு வெளிநாட்டு ஆடவர்களுக்கு தலா RM5,000 அபராதம்

கோத்தா திங்கி, அக்டோபர்-7,

ஜோகூர், பெங்கெராங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஓட்டப் போட்டியொன்றில், பொது வெளியில் அரைகுறை மற்றும் இந்நாட்டு கலாச்சாரத்துக்கு உடன்படாத ஆடைகளை அணிந்து ஓடிய இரு வெளிநாட்டு ஆடவர்களுக்கு, தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 70 வயது சத்தியநாராயணா பிரசாத் பாப்போலி (Satyanarayana Prasad Papoli), தைவான் நாட்டைச் சேர்ந்த 66 வயது ஆர்த்துர் வாங் ( Arthur Wang) இருவரும் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, கோத்தா திங்கி மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்தது.

அந்த தைவானிய முதியவர் தனது பின்பகுதி தெரியும் அளவுக்கு அரை நிர்வாணமாக உடுத்தியிருந்த வேளை, இந்தியாவைச் சேர்ந்த சத்தியநாராயணா பெண்கள் அணியும் சேலையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

நன்கொடை திரட்டுவதோடு ஜோகூரை குறிப்பாக டெசாரு உல்லாசத் தலத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் Hash House Harries என்ற அமைப்பு அவ்வோட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

எனினும், பலரும் குற்றம் சாட்டியது போல் LGBT எனப்படும் மூன்றாம் பாலினத்தவரின் கலாச்சாரத்தை விளம்பரப்படுத்தும் நோக்கம் தங்களுக்கில்லை என ஏற்பாட்டுக் குழு முன்னதாக விளக்கமளித்தது.

எந்த பாலினத்தவர் உரிமைக் குழுக்களுடனும் தங்களுக்குத் தொடர்பில்லை என அது கூறியது.

கோத்தா திங்கி, பண்டார் பெனாவார் அருகே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட அவ்வோட்டப் போட்டியில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் மோசமாக உடையணிந்த சம்பவத்தை, ஜோகூர் மந்திரி பெசார் முன்னதாக சாடியிருந்தார்.

மாநில முஸ்லீம்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் நடத்தப்பட்ட அந்நிகழ்வை, போலீஸ் விசாரிக்க வேண்டுமென்றும் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!