Latestமலேசியா

ஜோகூரில் 1kg & 2kg சமையல் எண்ணெய் பாட்டில்களுக்கு தொடரும் தட்டுப்பாடு

ஜோகூர் பாரு, மார்ச்-7 – ஜோகூரில் பல்வேறு இடங்களில் 1 கிலோ கிராம் மற்றும் 2 கிலோ கிராம் சமையல் எண்ணெய் பாட்டில்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கூலாய், பாசீர் கூடாங், லார்கின், தம்போய் போன்ற இடங்களில் மளிகைக் கடைகளிலும் சூப்பர் மார்கெட்டுகளிலும் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே சமையல் எண்ணெய் கையிருப்பு தீர்ந்திருப்பதாக சில்லறை வியாபாரிகள் கூறினர்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அந்த செம்பனை எண்ணெய், 1 கிலோ கிராம் பாட்டில் வடிவில் 6 ரிங்கிட் 90 சென்  விலையிலும் 2 கிலோ பாட்டில் 12 ரிங்கிட் 70 சென்னாகவும் விற்கப்படுகிறது.

தற்போதைக்கு  மாற்று ஏற்பாடாக கடலை எண்ணெய், கனோலா எண்ணெய், சோள எண்ணெய்,  சூரியகாந்தி எண்ணெய் இருக்கின்றன.

ஆனால் அவற்றின் விலை கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும்.

என்ற போதிலும், உதவித் தொகைப் பெறப்பட்ட 2 ரிங்கிட் 50 சென் விலையிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் கையிருப்புக்குப் பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் பாட்டில்களுக்கு நிலவும் பற்றாக்குறை தேசியப் பிரச்னை என்கிறார் ஜோகூர் மளிகை மற்றும் பல்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் வோங் கோக் வாய்.

கச்சா எண்ணெய் விலை  வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருப்பதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.

உலக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5,300 ரிங்கிட்டாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முந்தைய உச்சக்கட்ட விலை 3,800 ரிங்கிட்டாகும்.

இந்நிலையில், அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது இலாபகரமானது அல்ல என்பதால், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகள் தயங்குவதாக வோங் கூறினார்.

இப்பிரச்னைக்கு அரசாங்கம் ஏதாவது தீர்வு காண வேண்டுமென்பதே வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!