
ஜோகூர் பாரு, நவம்பர் 19-ஜோகூர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 5-ஆண்டு கால பெருந்திட்டத்தை உருவாக்க வேண்டுமென, கஹாங் சட்டமன்ற உறுப்பினர் R. வித்யானந்தன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் என இந்தியர்களுக்கு ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி (Onn Hafiz Ghazi) நிதி ஒதுக்கீடு செய்து வருவது பாராட்டுக்குரியது.
ஆனால், இந்தியச் சமூகத்துக்கு நீண்ட கால நன்மையைக் கொண்டு வர இந்தப் பெருந்திட்டம் அவசியமாவதாக, மாநில சட்டமன்றத்தில் நேற்று பேசிய போது வித்யானந்தன் குறிப்பிட்டார்.
2026-2030 வரையிலான அந்த ஐந்தாண்டு காலத் திட்டம், பொருளாதாரம், கல்வி, சமூகம், கலாச்சாரம் மற்றும் தலைமைத்துவத்தில் இந்தியர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கு ஏதுவாக, மாநில இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து அரசு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் துணையோடு முழு ஆய்வு நடத்த வேண்டும்.
அதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சமூக நலம், வாழ்க்கைத் தரம் குறிப்பாக B40 வர்கத்தினரின் வாழ்க்கை உயர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜோகூர் இந்தியர்கள் இன்னமும் நிரந்தர வேலையின்மை, வசதியற்ற குடியிருப்பு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதை வித்யானந்தன் சுட்டிக் காட்டினார்.
இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு புதியப் பொருளாதாரத் துறைகளில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் போன்றவையும் அதிகரிக்கப்பட வேண்டும்.
எனவே, 5-ஆண்டு கால பெருந்திட்டமே, மாநில இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால தீர்வு என அவர் குறிப்பிட்டார்.



