
மலாக்கா, அக்டோபர் -3, மலாக்கா, மாலிம் ஜெயா, சுங்கை மாலிம் ஆற்றில் 3.35 மீட்டர் நீளமுள்ள முதலைப் பிடிபட்டுள்ளது.
வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN வைத்த பொறியில், 200 கிலோ எடை கொண்ட Tembaga வகை அம்முதலை புதன்கிழமை சிக்கியது.
தங்களின் கால்நடைகள் முதலைக்கு இரையாகி வருவதாக மாலிம் பகுதி வாழ் மக்கள் புகாரளித்ததை அடுத்து, PERHILITAN அதனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியது.
ஒரு மாதமாக சுங்கை ஆயர் சாலாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டும் முதலை சிக்காததால், கடைசியாக சுங்கை மாலிமுக்கு பொறி மாற்றப்பட்ட நிலையில், நேற்று காலை அதில் முதலை மாட்டிக் கொண்டது.
எனினும், தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை இரையாக்கியது, பிடிபட்ட இந்த முதலையல்ல என குடியிருப்பாளர்கள் கூறியதால் PERHILITAN அதிர்ச்சி அடைந்தது.
இதை விட பெரியதான, வேறு நிறத்திலான முதலை அங்கிருப்பதாக மக்கள் கூறுவதால், அங்கு கண்காணிப்புப் பணிகள் தொடருகின்றன.
பொறி பழுதுபார்க்கப்பட்டதும், பிடிபடாமலிருக்கும் இன்னொரு முதலையைப் பிடிக்க அது ஆற்றில் வைக்கப்பட்டுமென மாநில PERHILITAN அதிகாரி சொன்னார்.