ஜோகூர் பாரு, அக் 16 – ஜோகூர் பாரு மாநகரில் சாலையோரத்தில் பெர்கர் விற்பனை செய்துவந்த 5 அங்காடி கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாடுகளைச் எழுவர் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் ( Mohd Rusdi Mohd Darus ) தெரிவித்தார். வேலை பெர்மிட் மற்றும் பாஸ் எதுவுமின்றி அந்த வெளிநாட்டினர் வேலை செய்தது , லைசென்ஸ் இன்றி வியாபாரம் செய்துவந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது எட்டு வெளிநாட்டினரும் உள்நாட்டை சேர்ந்த ஒருவரிடமும் சோதனை செய்யப்பட்டது. மூன்று வங்காளதேசிகள், இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவர், மியன்மார் பெண் மற்றும் இந்திய பிரஜையான ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 25 வயது முதல் 45 வயதுடையவர்களாவர். குடிநுழைவு சட்ட விதிகளை மீறியதன் தொடர்பில் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதமாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் ருஸ்டி தெரிவித்தார்.
இதனிடையே நள்ளிரவு மணி 12 .15 முதல் அதிகாலை ஒரு மணிவரை செனாயில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில் 50 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். சட்டப்பூர்வமான பெர்மிட் மற்றும் பாஸ் எதுவுமின்றி வேலை செய்து வந்ததன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நடவடிக்கையில் 94 தனிப்பட்ட நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் மியான்மாரைச் சேர்ந்த 15 ஆடவர்கள் மற்றும் 32 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் செத்தியா டிரோப்பிக்கா (Setia Tropika ) குடிநுழைவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் ருஸ்டி கூறினார்.