
செர்டாங், ஜனவரி-12, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் நேற்றிரவு பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக புகார் எதுவும் பெறப்படவில்லையென, செர்டாங் போலீஸ் தலைவர் AA அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இரவு 8 மணி வாக்கில் அப்பகுதி வாழ் மக்கள் வெடிப்பு போன்றதொரு பயங்கரச் சத்தத்தைக் கேட்டதாக முன்னதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
சியாரா 16, பூச்சோங் 14-வது மைல், புன்ச்சாக் ஜாலில், ஸ்ரீ செர்டாங் உள்ளிட்ட இடங்களிலும் அச்சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது.
இதனால் வீட்டின் கண்ணாடி சன்னல்கள் குலுங்கியதாகவும், தன் வாழ்நாளில் அது போன்ற பயங்கரமான சத்தத்தை தாம் கேட்டதே இல்லை என்றும் facebook பயனர் ஒருவர் கூறியிருந்தார்.
மூங்கில் பீரங்கிக்குண்டு போல் அச்சத்தம் இருந்ததாக அவர் சொன்னார்.
சிலர், பெரிய பட்டாசு வெடிப்புப் போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினர்.
இந்நிலையில் சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையும் தங்களுக்குத் தகவலேதும் கிடைக்கவில்லை எனக் கூறியது.
சில மாதங்களுக்கு முன்னர் பேராக், ஈப்போ வட்டாரத்திலும் இதே போன்ற மர்ம வெடிப்புச் சத்தம் கேட்டது நினைவிருக்கலாம்.