
ஜோகூர் பாரு, டிச 9 – ஜோகூர் பாருவிலுள்ள Bangunan Sultan Iskandarரில் உள்ள சுங்க, குடிநுழைவு, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட (CIQ) வளாகத்தில் உள்ள அனைத்து 46 Autogate எனப்படும் தானியாங்கி நுழைவாயில்கள் நேற்று தொழில்நுட்பக் கோளாறால் பழுதடைந்ததால் ஆயிரக்கணக்கான பேருந்து பயணிகள் நான்கு மணி நேரம் தாமதமாக வந்தனர்.
மதியம் 12.30 மணிக்கு ஏற்பட்ட அந்த கோளாறினால் , பேருந்து வருகை மற்றும் வெளியேறும் பகுதிகளில் குடிநுழைவு குடியேற்ற அனுமதியை சீர்குலைந்ததால் அதிகாரிகள் சொந்தமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
.கார்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்களின் குடிநுழைவு அனுமதி பாதிக்கவில்லை. மூத்த குடிமக்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசியத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு சிறப்புப் பாதைகள் திறக்கப்பட்டு, கூட்டத்தை நிர்வகிக்க, அதிகாரிகள் மாற்று முகப்பிடங்களை செயல்படுத்தினர்.
இதனிடையே தானியங்கி நுழைவாயில்கள் கோளாறு சீர்செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றிரவு குடிநுழைவு பரிசோதனைகள் வழக்க நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.