
ஜோகூர் பாரு, ஜனவரி-11 – ஜோகூர் பாருவில் உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகமான சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் (CIQ) இன்று e-Gate முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
எனினும் இக்கோளாறு வெளிநாட்டு கடப்பிதழ்கள் வைத்திருப்பவர்களை மட்டுமே பாதித்ததாக, AKPS எனப்படும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் வழக்கம்போல e Gate வாயிலை பயன்படுத்த முடிந்தது.
கோளாறு காரணமாக, வெளிநாட்டு பயணிகள் manual முறையிலான குடிநுழைவு முகப்புகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதனால் நீண்ட வரிசைகள் மற்றும் தாமதம் ஏற்பட்டது; என்றாலும் பாதுகாப்பு சோதனைகள் பாதிக்கப்படவில்லை; நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக AKPS கூறியது.
அதிகாரிகள் தற்போது கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலேசியா–சிங்கப்பூர் எல்லையில் மிகவும் பரபரப்பான நுழைவாயில்களில் ஒன்றான இந்த வளாகத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 10,000 வெளிநாட்டவர்கள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டதாக, இணைய ஊடகமொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், அதனை மறுத்த ஜோகூர் அரசாங்கம், e-Gate முறையில் தடங்கல் ஏற்பட்டாலும், எல்லை நடமாட்டத்தை அது செயலிழக்கச் செய்யவில்லை என விளக்கியது.



