
பிறை, செப்டம்பர்-23,
வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ, கொம்தார் கட்டடத்தில் SISWA Perai 2025 – இலவச மடிக்கணினி உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதில், 38 மாணவர்களுக்கு தலா RM1,800 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்ட வேளை மேலும் 4 மாணவர்களுக்கு RM1,000 முதல் RM1,500 வரை நிதி உதவி வழங்கப்பட்டது.
மொத்தமாக RM70,000 நிதியுதவி ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாண்டு மட்டும் சுந்தராஜூ தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து சுமார் RM300,000 பணத்தை 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவியாகவோ மடிக்கணினி வாயிலாகவோ வழங்கியுள்ளார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சுந்தரராஜு, டேக்சி ஓட்டுநராக தொடங்கி, பன்னாட்டு சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்த தனது வாழ்க்கைப் பயணத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
வறுமையிலிருந்து வெளிவர, கல்வி, உழைப்பு, வாய்ப்பு ஆகியவையே முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
மாணவர்கள் இந்த மடிக்கணினிகளை அறிவுக்கான கருவிகளாக பயன்படுத்தி, கல்வியில் வெற்றி பெற்ற பிறகு, சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
2024-ல் தொடங்கிய இந்த SISWA Perai திட்டம், உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சுமையை குறைத்து, எந்தக் குழந்தையும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதே நோக்கம் என, பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.