
ஜோகூர் பாரு, ஜனவரி-21-கோயில் மற்றும் தமிழ்ப்பள்ளிக்கான நிலம் என ஜோகூரில் இந்த வாரம் இந்திய சமூகத்திற்கு மகிழ்ச்சியூட்டும் அனுகூலங்கள் கிடைத்துள்ளன.
ஜோகூர் பாரு, மாசாயில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் பிளந்தோங் கோவில் சுமார் 50 ஆண்டுகளாக நிலப்பட்டாவுக்கு விண்ணப்பம் செய்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ நில அனுமதி கடிதத்தை பெற்றுள்ளது.
இந்த நீண்டகால காத்திருப்புக்கான வெற்றி, ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார துறைகளுக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினரும், மாநில ம.இ.கா தலைவருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி முயற்சியில் சாத்தியமானது.
இதற்காக, ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசிக்கு ரவின் நன்றி தெரிவித்தார்.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கான பணிக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு அரசு அமைப்புகள் இணைந்து, கோவிலின் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வேளையில், மாடோஸ் மற்றும் செம்பரோங் தோட்டத் தமிழ் பள்ளிகள் பிரச்னைக்கும் விடிவுகாலம் பிறந்துள்ளது.
அவையிரண்டும் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 6 ஏக்கர் நிலப்பட்டாவைப் பெற்றன.
இந்த பிரச்னையை 2022 முதல் கவனத்தில் கொண்டு, பல கூட்டங்களை நேரடியாகத் தலைமை தாங்கி நடத்தி, ரவின் தீர்வை கொண்டு வந்துள்ளார்.
இதற்கும் மந்திரி பெசாரும், மாநில கல்விக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Azman Tamin-நும் முழு ஆதரவு அளித்தனர் எனவும், இவ்வேளையில் அவ்விருவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ரவின் கூறினார்.



