
புத்ராஜெயா, ஜூலை-9 – அரசாங்க ஊழியர்கள் மத்தியில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பயன்பாட்டை முறியடிக்கும் விதமாக, டிஜிட்டல் சான்றிதழைப் பயன்படுத்தக் கோரும் பரிந்துரை, விரிவாக ஆராயப்பட வேண்டும்.
பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ வான் அஹ்மாட் டஹ்லான் அப்துல் அசிஸ் அவ்வாறு கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் முன்வைத்துள்ள அப்பரிந்துரை, மடானி அரசாங்கத்தின் டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது.
அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே; ஆனால் சுகாதார அமைச்சான KKM உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் தயார் நிலை உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
சட்ட சிக்கல், தனிநபர் தரவு பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதி ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களும் அவற்றிலடங்கும்.
ஒருவேளை அமுலுக்கு வந்தால், உண்மையிலேயே அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாகவும், யாராலும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என வான் அஹ்மாட் சொன்னார்.
டிஜிட்டல் மருத்துவ விடுப்புச் சான்றிதழைப் பயன்படுத்துவதன் மூலம், அதன் நம்பகத்தன்மையை உறுதிச் செய்துகொள்ள முதலாளிமார்கள் சுகாதார பராமரிப்பு மையங்களைத் தொடர்புகொள்ள முடியுமெனக் கூறி, கியூபெக்ஸ் முன்னதாக அப்பரிந்துரையை முன்வைத்தது.
கெடா, சுங்கை பட்டாணியில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழைத் தயாரித்து விற்று வந்ததன் பேரில், ஓர் இருதய நோயாளி உட்பட மூவர் கைதானதை அடுத்து அப்பரிந்துரை முன்வைக்கப்பட்டது.