முதுமைக் கால மறதி நோய்க்கும் திருமணத்திற்கும் தொடர்புண்டு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஃபுளோரிடா, ஏப்ரல்-1, திருமணத்திற்கும் dementia எனப்படும் முதுமைக் கால மறதி நோய்க்கும் ஆச்சரியமூட்டும் தொடர்பிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆதாவது, திருமணமானவர்களுக்கு அந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
இப்புதிய ஆய்வு முடிவு ஆராய்ச்சியாளர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இதற்கு முந்தைய ஆய்வுகள் எல்லாம் திருமணத்தால் ஆரோக்கியப் பலன்கள் அதிகமிருப்பதை தான் வலியுறுத்தியிருந்தன.
ஆனால், இந்த ஃபுளோரிடா மாநில பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வில், திருமணமே ஆகாத அல்லது விவாகரத்துப் பெற்ற முதியோர்களுக்கு dementia நோய் ஏற்படும் வாய்ப்பு, மற்றவர்களை விட மிக மிகக் குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது.
வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கும் திருமணத்திற்கும் இடையிலான தொடர்பை கண்டறிய 18 ஆண்டு கால ஆய்வை நடத்தியுள்ளனர்.
24,107 வயதான தனிநபர்களை, திருமணமானவர்கள், துணையைப் பறிகொடுத்தவர்கள், விவாகரத்து ஆனவர்கள், அறவே திருமணம் செய்யாதவர்கள் என 4 பிரிவாகப் பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், திருமணமானவர்களை விட, திருமணமே ஆகாத முதியோருக்கு dementia ஏற்படும் வாய்ப்பு 40 விழுக்காடு குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.
அதே சமயம் விவாகரத்துப் பெற்ற, முதுமைக் காலத்தை தனியாகக் கழிப்பவர்களுக்கு அந்நோய் ஏற்படும் வாய்ப்பு 34 விழுக்காடு குறைவாக உள்ளது.
இதற்கான ‘இரகசியத்தை’ ஆராய்ந்ததில், திருமண பந்தமின்றி வாழ்பவர்கள் நண்பர்கள், அண்டை அயலார் என வலுவான சமூகத் தொடர்பை வளர்த்துகொண்டு, ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்; இது, அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியாகவும் வைத்திருக்க உதவுகிறது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
அதே சமயம், திருமண பந்தத்தில் இணைந்தவர்களுக்கு, வாழ்க்கைச் சுமை, பொறுப்பு, கடமை என பல்வேறு விஷயங்களில் சதா கவனம் செலுத்த வேண்டியுள்ளது; இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, கடைசியில் மறதி நோய்க்கு இட்டுச் செல்வதாக அவர்கள் நினைக்கின்றனர்.
இதிலிருந்து 2 விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன; ஒன்று – திருமணமாகாத நபர்கள் தாமதமாகவே நோயறிதல்களை மேற்கொண்டிருக்கக் கூடும்; அல்லது திருமண பந்தமானது, dementia நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது என இத்தனை நாளாய் நாம் நம்பியிருந்த கூற்றை உடைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.