டோனல்ட் ட்ரம்ப் ‘மனது’ வைத்ததால், அமெரிக்காவில் சேவைக்குத் திரும்பிய டிக் டோக்

வாஷிங்டன், ஜனவரி-20 – தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களுக்காக அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை தடைச் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, டிக் டோக்கின் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது.
அதனை சாத்தியமாக்கியதற்கு, இன்று பின்னேரம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப்புக்கு நன்றி என அந்த வீடியோ பகிர்வுத் தளம் கூறியது.
டிக் டோக்கின் அமெரிக்க செயல்பாட்டை, சீன அல்லாத நிறுவனத்திடம் விற்க வேண்டுமென டிக் டோக்கின் தாய் நிறுவனமான ByteDance-க்கு விதிக்கப்பட்ட காலக்கெடு ஜனவரி 19-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
அமெரிக்க அரசின் அவ்வுத்தரவை எதிர்த்து டிக் டோக் நடத்திய சட்டப் போராட்டம், உச்ச நீதிமன்றத்திலும் தோல்வியுற்றது.
இதையடுத்து, அமெரிக்க PlayStore-ரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை டிக் டோக் நீக்கப்பட்டது.
தனது சேவை ‘தற்காலிகமாக’ நிறுத்தப்பட்டிருப்பதை டிக் டோக்கும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் ஒரு சுமூகத் தீர்வு எட்டப்படும் வரை டிக் டோக் மீதான தடையை ஒத்தி வைக்க ஏதுவாக, பதவியேற்ற கையோடு ஆணைப் பிறப்பிக்க டிரம்ப் நேற்று உறுதியளித்தார்.
அவ்வகையில் டிக் டோக்கில் அமெரிக்க நிறுவனமும் 50 விழுக்காட்டு பங்குகளைக் கொண்டிருந்தால் நல்லது என டிரம்ப் பரிந்துரைத்தார்; அதன் மூலம் ட்ரில்லியன் கணக்கான டாலர் வருமானத்தைக் குவிக்க முடியுமென்றார் அவர்.
நாளை வெள்ளை மாளிகைத் திரும்பியதும் டிரம்ப்பின் நடவடிக்கைகளை யார் கண்காணிக்கிறார்களோ இல்லையோ, டிக் டோக் நிச்சயம் அணுக்கமாகக் கண்காணிக்கும் என்பது திண்ணம்.