ட்ரம்ப்புக்கு ‘மரண அடி’; வரிகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாஷிங்டன், பிப்ரவரி-21,
அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் அனைத்துலக அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் உலக நாடுகள் மீது இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு ட்ரம்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது; எனவே அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என்ற நீதிமன்றத்தின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிபருக்கான அதிகாரத்தை மீறி ஒன்றுமில்லை என்ற அளவுக்கு ட்ரம்ப் செயல்பட்டு வருவதாகவும் நீதிமன்றம் சாடியது.
கடந்தாண்டு மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து, உலக நாடுகளைப் பணிய வைக்கவும், பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் ட்ரம்ப் தன்னிச்சையாக வர்த்தக வரிகளை விதித்து வந்தார்.
இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
எனினும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு, 200 பில்லியன் டாலருக்கும் மேல் வசூலிக்கப்பட்ட வரிகளை கேள்விக்குறியாக்குவதால், ட்ரம்ப் நிர்வாகத்துக்கு விழுந்த மரண அடியாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வழக்கம் போல் ட்ரம்ப் அசருவதாகத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ‘அவமானம்’ எனக் கண்டித்து, தன்னிடம் மாற்று திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அதோடு, நீதிபதிகள் தேசப்பற்று மற்றும் விசுவாசம் அற்றவர்களாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது…



