Latestமலேசியா

தகராறின்போது இளம்பெண் கத்தியால் குத்தியதால் ஆடவர் மரணம்

கோலாலம்பூர், ஏப் 7 – மாறான், பெல்டா ஜெங்கா டுவாவில் வெறித்தனமாக ஆடவர் ஒருவர் ஒரு பெண்ணையும், பதின்ம வயது இளைஞரையும் தாக்கிய சம்பவத்திற்கு பின்னர் அந்த ஆடவர் மரணம் அடைந்தார்.

தகராறின்போது, ஒரு பெண் கத்தியால் தாக்கியதில் 57 வயது ஆடவர் மரணம் அடைந்தார். அந்த ஆடவர் வெறித்தனமாக அண்டை வீட்டு பெண் ஒருவரையும், இதர நான்கு பதின்ம வயதினரையும் தாக்க முயன்றபோது அவர்களுக்கிடையே தகராறு மூண்டதாக மாறான் போலீஸ் தலைவர் வொங் கிம் வாய் (Wong Kim Wai) தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த ஜெங்கா மருத்துவமனையின் மருத்துவ உதவியாளர்கள் அந்த ஆடவர் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

நேற்று காலை 10.15 மணியளவில், ஒரு பெண்ணுக்கும் உள்நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்களுக்கும் சண்டை ஏற்பட்டதாக சுங்கை ஜெரிக் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அண்டை வீட்டுக்காரரான சந்தேகப் பேர்வழி வெறித்தனமாக தாக்கியதோடு, இருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியதாக விசாரணை மூலம் தெரியவந்தது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் வந்தபோது, சந்தேகப் பேர்வழி சுயநினைவின்றி இருந்ததோடு, அவரது கைகளும் கால்களும் கிராம மக்களினால் கட்டப்பட்டிருந்ததாக வொங் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில், தாடை மற்றும் வலது கையில் கத்திக் குத்து காயத்திற்கு உள்ளான 52 வயதுடைய பெண், தெமர்லோவிலுள்ள சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண்ணின் மற்றொரு உறவினரான 16 வயது இளைஞனும் வலது தொடையில் கத்திக் குத்து காயத்திற்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பியதாகவும் வொங் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!