
கோலாலம்பூர், ஏப் 17 – கிளந்தானில் உள்ள வெவ்வேறு நகரங்களில்
13 மற்றும் 14 வயதுடைய இரு பதின்ம வயதினர் தங்களது தந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்களில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது தந்தையால் மட்டுமல்ல, இரண்டு மாமாக்களாலும் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எடுத்துக்காட்டும் மாநில காவல்துறையின் டிக்டோக் வீடியோவைப் பார்த்த பிறகு அந்த இரண்டு சிறுமிகளும் புகார் செய்திருப்பதாக கிளந்தான் போலீஸ் தலைவர் யூசோப் மாமாட் ( Yusoff Mamat ) கூறியுள்ளார். தானா மேரா மற்றும் கோலா கிராயில் அந்த இரு சிறுமிகளும் செவ்வாய்க்கிழமையன்று புகார் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் தனது தந்தை மற்றும் இரண்டு மாமன்மார்களால் கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தானா மேராவில் புகார் செய்துள்ளார். கோலாக்கிராயில் புகார் செய்திருக்கும் சிறுமி கடந்த ஆண்டு முதல் தனது தந்தையால் கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். அந்த இரண்டு சிறுமிகளும் தாங்களாகவே புகார் செய்திருப்பதால் மருத்துவ அறிக்கைக்காக போலீஸ் தற்போது காத்திருப்பதாக யூசோப் கூறினார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு கிளந்தானில் கற்பழிப்பு மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட 206 பாலியல் சம்பவங்களும் கந்த ஆண்டு 252 சம்பவங்களும் நடந்ததாக இதற்கு முன் யூசோப் கூறியிருந்தார். பாதிக்கப்பட்டவர்களில் பொரும்பாலோர் 10 மற்றும் 11 வயதுடைய சிறுமிகளாவர்.